ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து இயக்க கோரிக்கை
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்வதற்கு ரயில் வாயிலாக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணி ரயில் நிலையத்திற்கு வருகின்றனர். ரயில் நிலையத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு நேரடி பேருந்து வசதியில்லாததால், பெரும்பாலான பக்தர்கள் ஆட்டோ வாயிலாக மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். இரண்டு கி.மீ., துாரம் செல்வதற்கு ஆட்டோ ஓட்டுனர்கள், 200 ரூபாய் கட்டணமாக வசூலிக்கின்றனர். இதனால் நடுத்தர வசதி கொண்ட பக்தர்கள், ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் துாரம் நடந்து தணிகை இல்லம் பகுதிக்கு வருகின்றனர். அங்கிருந்து கோவில் நிர்வாகம் சார்பில் இயக்கப்படும் பேருந்து வாயிலாக மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். வெறும் பத்து ரூபாய் கட்டணத்தில் பக்தர்கள் செல்கின்றனர். இதுவே கோவில் நிர்வாகம் பேருந்தை ரயில் நிலையம் வரை இயக்கினால் பக்தர்கள் அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்படாது. ரயில் நிலையத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு நேரடி பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துள்ளனர். எனவே கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்கின்றனர்.