பொன்னேரி - திருவெள்ளவாயல் அரசு பேருந்து இயக்க கோரிக்கை
பொன்னேரி:பொன்னேரி - திருவெள்ளவாயல் இடையே அரசு பேருந்து இயக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொன்னேரியில் இருந்து மேட்டுப்பாளையம், அனுப்பம்பட்டு, அக்கரம்பேடு வழியாக தேவதானம் பகுதிக்கு, 20 ஆண்டுகளுக்கு முன், தடம் எண் - 95டி என்ற அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது.அப்போது, சாலை சேதமடைந்து இருந்ததால், அந்த வழித்தடத்தில் சென்ற இப்பேருந்து நிறுத்தப்பட்டது. சாலை இருவழியாக புதுப்பிக்கப்பட்ட பின்பும், மீண்டும் அந்த வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்து துவக்கப்படவில்லை.கடந்த 20 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட பேருந்து, இதே வழித்தடத்தில் மீண்டும் இயக்க வேண்டும் என, கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதுகுறித்து கிராமவாசிகள் கூறியதாவது:தேவதானம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வட ஸ்ரீரங்கம் எனப்படும் ரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.பேருந்து போக்குவரத்து இல்லாமல் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும், இந்த வழித்தடத்தில் உள்ள கிராம மக்களும் தவிக்கின்றனர்.பொன்னேரியில் இருந்து மேட்டுப்பாளையம், தேவதானம், வேலுார் வழியாக திருவெள்ளவாயல் வரை பேருந்து இயக்கினால், 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும். எனவே, போக்குவரத்து கழக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.