கோனேட்டம்பேட்டை கோவில் குளம் சீரமைக்க கோரிக்கை
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், கோனேட்டம்பேட்டை கிராமத்தின் வடகிழக்கில் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மேற்கிலும், தெற்கிலும் இரண்டு குளங்கள் உள்ளன. இதில், மேற்கில் உள்ள குளம், ஊராட்சி சார்பில் துார் வாரி சீரமைக்கப்பட்டு வருகிறது.தெற்கில் உள்ள பழமையான குளம், பராமரிப்பு இன்றி சீரழிந்து வருகிறது. இந்த குளத்திற்கு நான்கு பக்கமும் படிகள் உள்ளன. வடக்கில் உள்ள படித்துறை நீண்ட துாரத்திற்கு சாய்தளமாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த படிகள் வழியாக கால்நடைகளும் எளிதாக குளத்தில் இறங்கி தாகம் தணித்துக்கொள்ள முடியும் என பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். பழமையான கட்டட கலைக்கு உதாரணமாக விளங்கும் இந்த குளத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, கோனேட்டம்பேட்டை கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.குளக்கரையில் உள்ள அம்மன் கோவில் சுற்றுச்சுவரிலும், பலவிதமான புடைப்பு சிற்பங்கள் உள்ளதும் இந்த கிராமத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றி வருகின்றன என்றால் அது மிகையல்ல.