கொசஸ்தலை ஆற்றின் வழியாக வண்டிப்பாதை அமைக்க கோரிக்கை
பள்ளிப்பட்டு, பள்ளிப்பட்டு அருகே உருவாகும் கொசஸ்தலை ஆறு பெருமாநல்லுார், மேலப்பூடி, நெடியம், சாமந்தவாடா, புண்ணியம் வழியாக சென்று பூண்டி நீர்த்தேக்கத்தை அடைகிறது.இதில், பள்ளிப்பட்டு மற்றும் நெடியம் அருகே இரண்டு தடுப்பணைகளும், நெடியம் மற்றும் புண்ணியம் இடையே இரண்டு பாலங்களும் கட்டப்பட்டுள்ளன. இதில், நெடியம் பாலம் பலமுறை இடிந்து சேதம் அடைந்துள்ளது.இதனால், இந்த பாலத்தின் வழியாக கனரக வாகனங்கள் பயணிப்பது இல்லை. விபத்து அபாயத்தையும் உணராமல் இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் பயணித்து வருகின்றன.இந்நிலையில், பள்ளிப்பட்டு அடுத்த கொளத்துார் பகுதியில் இயங்கிவரும் பாறை குவாரியில் இருந்து ஜல்லிக்கல், எம்- சான்ட், கட்டுக்கல் உள்ளிட்டவற்றை ஏற்றிவரும் டிராக்டர்கள், விஜயராகவபுரம் வழியாக கொசஸ்தலை ஆற்றை கடந்து மேலப்பூடிக்கு வருகின்றன. இதன் வாயிலாக பயண துாரம், 10 கி.மீ., வரை குறைகிறது. இதனால், மேலப்பூடி மற்றும் விஜயராகவபுரம் இடையே கொசஸ்தலை ஆற்றில் டிராக்டர்கள் இயங்கும் விதமாக பாறைகளால் வண்டிப்பாதை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.