பொன்னேரி நகரில் சிசிடிவி பொருத்த கோரிக்கை
பொன்னேரி:பொன்னேரி நகரப்பகுதியானது, சுற்றியுள்ள, 200க்கும் மேற்பட்ட கிராமங்களின் வியாபார மையமாகவும், தாலுக்கா தலைமையிடமாகவும் அமைந்து உள்ளது.இங்கு சப்-கலெக்டர், தாசில்தார், மீன்வளம், வேளாண்மை, சார் - பதிவாளர், ஐந்து நீதிமன்றங்கள், அரசு கலைக்கல்லுாரி, அரசு மீன்வளக்கல்லுாரி உள்ளிட்டவைகள் உள்ளன. பல்வேறு தேவைகளுக்காக பொன்னேரி நகரத்திற்கு மக்கள் வந்து செல்கின்றனர்.அவர்களின் பாதுாப்பு கருதி, கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன், பொன்னேரி நகரப்பகுதியில் பழைய பேருந்து நிலையம், தேரடி, அம்பேத்கர் சிலை உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்பட்டு வந்தது.தொடர் பராமரிப்பு இல்லாததால் அவை பழுதடைந்தும், உடைந்தும் போயின. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. பொதுமக்களுக்கும், அவர்களின் உடமைகளுக்கும் பாதுகாப்பு வழங்கும் வகையில், நகரின் முக்கிய சாலை சந்திப்புகள், அரசு அலுவலங்கள் செயல்படும் பகுதிகளில், மீண்டும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.