ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 வார்டுகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளனர். இங்குள்ள பஜார் பகுதியில் பழம், காய்கறி, பூ, மளிகை உள்ளிட்ட கடைகள் உள்ளன.சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர், புத்துார், நகரி, திருப்பதி, கடப்பா, கர்நுால், நந்தியால், ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள், ஊத்துக்கோட்டை பஜார் பகுதி வழியே செல்கின்றன.மேலும், மணல், எம்.சான்ட் லாரிகள் அதிகளவில் இச்சாலை வழியே செல்கின்றன. வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்கின்றனர். நெருக்கடி, ஆக்கிரமிப்பு, வேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, பஜார் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.