திருவள்ளூர் ரயில் நிலையத்தில் கூடுதல் கவுன்டர் திறக்க கோரிக்கை
திருவள்ளூர்:திருவள்ளூர் ரயில் நிலையத்தில் உள்ள கணினி முன்பதிவு மையத்தில் கூடுதல் கவுன்டர் திறக்கவேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் முக்கிய அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வங்கிகள் செயல்படுகின்றன. மேலும், காக்களூர் தொழிற்பேட்டையில், தமிழகம் மற்றும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், தங்கள் சொந்த ஊருக்கு செல்ல பெரும்பாலும் ரயில் பயணத்தையை விரும்புகின்றனர்.மேலும், திருவள்ளூரில் வசிப்போர் அலுவல் பணி காரணமாக, ஆந்திரா, மகாராஷ்ட்ரா, கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர். இவர்கள் வசதிக்காக, திருவள்ளூர் ரயில் நிலையத்தில் கணினி முன்பதிவு மையம் செயல்படுகிறது. தற்போது ஒரு கவுன்டர் மட்டுமே செயல்பட்டு வருகிறது. 'தட்கல்' டிக்கெட் வாங்க அதிகாலை முதலே பயணிகள் குவிகின்றனர். தட்கல் பதிவு துவங்கும் போது, தட்கல் பயணியருக்கும், பொது பயணியருக்கும் தகராறு ஏற்படுகிறது. இங்கு இரண்டாவது கவுன்டர் அமைக்கப்பட்டும் கூடுதல் பணியாளர் இல்லாததால் செயல்படவில்லை.எனவே, திருவள்ளூர் ரயில் நிலையத்தில் உள்ள கணினி முன்பதிவு மையத்தில் கூடுதல் பணியாளரை நியமித்து இரண்டாவது கவுன்டரை செயல்படுத்த வேண்டும், என, ரயில்வே துறை உயர் அதிகாரிகளுக்கு, பயணியர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.