கும்மமுனிமங்கலம் குளம் சீரமைக்க கோரிக்கை
பொன்னேரி:கும்மமுனிமங்கலம் குளத்தை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட கும்மமுனிமங்களம் பகுதியில் உள்ள, ஊர் பொதுக்குளம் பராமரிப்பு இன்றி உள்ளது.குளம் முழுதும், ஆகாயத்தாமரை சூழ்ந்தும், குப்பை குவிந்தும் இருக்கின்றன. பல்வேறு பகுதிகளின் கழிவுநீரும் குளத்தில் நேரிடையாக விடப்படுகிறது.ஆகாயத்தாமரை, குப்பை மற்றும் கழிவுநீரால், குளம் பொலிவிழந்து இருக்கிறது. மேலும், குளம் ஆக்கிரமிப்பாளர்களால் சுருங்கியும் வருகிறது.பொன்னேரியின் நகரப்பகுதியில் அமைந்துள்ள ஒரே குளம் இதுமட்டுமே ஆகும். இது பொலிவிழந்து இருப்பது சுற்றுசூழல் ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து அவர்கள் கூறியதாவது:நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளம் பல ஆண்டுகளாக துாய்மைப்படுத்தப்படாமல் இருக்கிறது. சிறிது சிறிதாக குளம் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், அடுத்த சில ஆண்டுகளில் குளம் இருந்த சுவடே இருக்காது. குளத்தை முழுமையாக அளவீடு செய்து, துாய்மைப்படுத்தி பராமரிக்கவும், சுற்றிலும் விளையாட்டு பூங்காங்கா மற்றும் நடைபயிற்சி செய்வர்களுக்கான நடைபாதை ஆகியவற்றை ஏற்படுத்தவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.