பனப்பாக்கம்- - இலுப்பாக்கம் சாலையை சீரமைக்க கோரிக்கை
பொன்னேரிபனப்பாக்கம் - இலுப்பாக்கம் கிராமங்களுக்கு இடையேயான சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்தும், பள்ளங்களில் மழைநீர் தேங்கியும் இருப்பதால், விபத்து அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.பொன்னேரி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில் இருந்து, குமரஞ்சேரி வழியாக இலுப்பாக்கம் செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது.ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. பள்ளங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. அவற்றில் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.இச்சாலையில் அரசு பேருந்துகள் பயணிக்கும்போது, பயணியர் அச்சம் அடைகின்றனர். பள்ளங்களை தவிர்க்க வலது, இடது என, பேருந்துகள் மாறி மாறி பயணிக்கின்றன. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை சிறிது இழந்தாலும், அருகில் உள்ள விளைநிலங்களில் பேருந்து கவிழும் அபாயம் உள்ளது.இருசக்கர வாகனங்களில் செல்லும் கிராமவாசிகளும் சிரமத்துடன் பயணிக்கின்றனர். எனவே, சாலையை விரிவுபடுத்தி சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.