கிருத்திகைக்கு சிறப்பு பேருந்து நெடியத்திற்கு இயக்க கோரிக்கை
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அடுத்த நெடியத்தில் அருள்பாலிக்கும் கஜகிரி செங்கல்வராயன் மலைக்கோவிலுக்கு, கிருத்திகை நாளில் திருத்தணியில் இருந்து சிறப்பு பேருந்து இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.பள்ளிப்பட்டில் இருந்து நகரி செல்லும் சாலையில் நெடியம் கஜகிரி செங்கல்வராயன் மலைக்கோவில் அமைந்துள்ளது. யானை படுத்திருப்பது போன்ற தோற்றத்தில் இந்த மலை காணப்படுவதால், கஜகிரி என அழைக்கப்படுகிறது.இக்கோவிலுக்கு, கிருத்திகை உத்சவத்தின் போது பள்ளிப்பட்டு, வெங்கம்பேட்டை, சொரக்காய்பேட்டை மற்றும் ஆந்திர மாநிலம் நகரி அடுத்த புதுப்பேட்டை, ஏகாம்பரகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஏற்கனவே, திருத்தணியில் இருந்து நகரி வழியாக நெடியம் வரை தடம் எண்: டி15 என்ற அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில், இப்பேருந்து சேவையை மேலும் அதிகரிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.