| ADDED : ஜன 20, 2024 11:23 PM
மீஞ்சூர், மீஞ்சூர் பேரூராட்சியில், 18 வார்டுகளில், 30,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் நிலத்தடி நீர் உவர்ப்பாக இருக்கிறது. பேரூராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படும் குடிநீரும் உவர்ப்புத்தன்மையுடன் இருப்பதால், குடியிருப்புவாசிகள், பிளாஸ்டிக் கேன்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் குடிநீரை வாங்கி பயன்படுத்தும் நிலையில் உள்ளனர்.ஏழை கூலித்தொழிலாளிகள், நடுத்தர மக்கள் தினமும் குடிநீரை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தும்போது பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.இதற்கு நிரந்தர தீர்வாக, மீஞ்சூருக்கு அருகில் உள்ள புழல் ஏரியில் இருந்து குடிநீர் கொண்டு வந்து வழங்க வேண்டும் என மீஞ்சூர் சுற்று வட்டார மக்கள் நலக்கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.இது தொடர்பாக அமைப்பின் செயலர் டி.ஷேக் அகமது தெரிவித்ததாவது:தற்போது, மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்டசாலையானது புழல் ஏரி அருகே பயணிக்கிறது. அங்கிருந்து மீஞ்சூர் பகுதிக்கு குடிநீர் கொண்டு வருவது எளிதானதாகும். மேற்கண்ட வெளிவட்ட சாலையை ஒட்டி, குழாய்கள் அமைத்து குடிநீர் வர முடியும். இது இப்பகுதி மக்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும். அதற்கான நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்ட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் புழல் ஏரியின் உபரிநீர் வீணாக கடலில் சென்று கலந்து வீணாகும் நிலையில், அதில் ஒரு பகுதி எங்களுக்கு கிடைத்தால் பயனுள்ளதாக அமையும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.