உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நீர்த்தேக்கத்தில் கசிவை தடுக்க தடுப்புச்சுவர்...புது டெக்னிக்:ரூ.40 கோடியில் சோழவரத்தில் பணி துரிதம்

நீர்த்தேக்கத்தில் கசிவை தடுக்க தடுப்புச்சுவர்...புது டெக்னிக்:ரூ.40 கோடியில் சோழவரத்தில் பணி துரிதம்

சோழவரம்:சோழவரம் நீர்த்தேக்கத்தில், 40 கோடி ரூபாய் செலவில், நவீன தொழில்நுட்பத்தில், நீர்க்கசிவு தடுப்புச்சுவர் அமைத்து, கரைகள் பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சோழவரம் நீர்த்தேக்க ஏரி, 1,081 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. மழைக்காலங்களில் மழைநீர் தேக்கி வைக்கப்பட்டு, பேபிகால்வாய் வழியாக புழல் ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டு, சென்னை குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.கடந்த 2014ம் ஆண்டு ஏரியின் கொள்ளளவு, 0.88 டி.எம்.சியில் இருந்து, 1.081 டி.எம்.சி.யாக உயர்த்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இதற்காக கலங்கல் மற்றும் கரைகளின் உயரம் அதிகரிக்கப்பட்டது. அப்பணிகள் சரிவர மேற்கொள்ளப்படாத நிலையில், கடந்த 2015ல் கரைகள் சேதமடைந்து, ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டன. அப்போது, தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.கடந்தாண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையால், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்பட்டதால், வேகமாக நிரம்பி, அதன் முழு கொள்ளளவான, 1.08 டி.எம்.சி., தண்ணீர் தேங்கியது.ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில், கரைகள் ஆங்காங்கே சேதமடைந்தன. கரைகளின் ஓரங்களில் போடப்பட்டிருந்த கான்கிரீட் கட்டுமானங்கள் உடைந்து சிதைந்தன.பொதுப்பணித்துறையினர் மணல் மூட்டைகளை போட்டும், செம்மண் கொட்டியும் தற்காலிக தீர்வை ஏற்படுத்தினர். இதனால், சோழவரம் ஏரியை சுற்றியுள்ள கிராமங்களில் அச்சம் நிலவியது.இதையடுத்து, நீர்வளத்துறை அதிகாரிகள் சோழவரம் நீர்த்தேக்கப் பகுதியை முழுமையாக ஆய்வு செய்தனர்.நீர்வளத்துறை அதிகாரிகள் வழங்கிய பரிந்துரைகளின்படி, நடப்பாண்டு சோழவரம் ஏரி சீரமைப்பு பணிகளுக்கு, 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.கடந்த மூன்று மாதங்களாக அங்கு கரை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கரைகளின் உள்பகுதியில், 1,050 மீ., நீளம், 6 மீ., உயரத்தில் கான்கிரீட் சுவர் அமைக்கப்படுகிறது.தற்போது, 560 மீ., நீளத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டு, அங்கு செம்மண் கொட்டி, 5 மீ., அகலத்தில் கரைகள் பலப்படுத்தப்படுகிறது.மீதமுள்ள இடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. நவீன தொழில்நுட்பமான 'டி - வால்' எனப்படும் நீர்க்கசிவு தடுப்புச்சுவர் அமைக்கப்படுகிறது.இதன் வாயிலாக ஏரியில் தேங்கும் தண்ணீர் சிறிதும் வெளியேறாமலும், கரைகளில் மண் அரிப்பு ஏற்படுவதை முற்றிலும் தடுக்கும் வகையில் அமைகிறது.இது 'சாயல் கிராபர்' எனப்படும் நவீன மண்வெட்டும் இயந்திரத்தின் உதவியுடன் துல்லியமான அளவில் பள்ளம் தோண்டி, அதில், நீர்க்கசிவு தடுப்புச்சுவர் அமைக்கப்படுகிறது. இதனால், ஏற்கனவே உள்ள கரைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது தவிர்க்கப்படுகிறது.நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருள்மொழி தலைமையில், உதவி செயற்பொறியாளர் சத்திய நாராயணன், உதவி பொறியாளர்கள் சுந்தரம், லோகரட்சகன் ஆகியோர் கொண்ட குழுவினர் தினமும், சோழவரம் ஏரி சீரமைப்பு பணிகளை கண்காணித்து வருகின்றனர்.கரைகள் பலப்படுத்துவது, கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைப்பது என, தொழிலாளர்கள் பல்வேறு இயந்திரங்களின் உதவியுடன் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

கனமழைக்கு முன் நீரை தேக்கி வைக்க திட்டம்

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:சோழவரம் நீர்த்தேக்கத்தின் உள்பகுதியில் நீர்க்கசிவு தடுப்புச்சுவர் முழுதும் புதிய தொழில்நுட்பமாகும். இதனால், கரைகள் உறுதியாக இருக்கும். இதுதவிர தேவனேரி பகுதியில் உள்ள ஏரியின் கலங்கல் பகுதியிலும் மூன்று ஷட்டர்கள் அமைய உள்ளன. ஏரியில் நீர்வரத்து அதிகரிக்கும்போது, புழல் நீரிக்கு ஏரிக்கு கொண்டு செல்ல முடியாத சூழலில், அவசரகால ஏற்பாடாக ஷட்டர்கள் திறக்கப்பட்டு, கால்வாய் வழியாக அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு கொண்டு செல்லப்படும்.வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், பணிகள் துரிதபடுத்தப்பட்டு உள்ளது. மழைப்பொழிவு இருப்பதால், பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. கனமழைக்கு முன் பணிகளை முடித்து, நீரை தேக்கி வைக்க திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை