கான்கிரீட் பெயர்ந்த குடிநீர் தொட்டி கல்லம்பேடு பகுதியினர் அச்சம்
கல்லம்பேடு:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட கல்லம்பேடு ஊராட்சி. இங்கு கல்லம்பேடு, கல்லம்பேடு காலனி, பூவனுார், பூவனுார் காலனி, ஏலம்பாக்கம், ஏலம்பாக்கம் காலனி, ஏலம்பாக்கம் மேற்குநத்தம் என ஏழு குக்கிராமங்கள் உள்ளன.இங்கு ஆறு வார்டுகளும், 30 தெருக்களில், 600 வீடுகளில், 2,500 பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதிவாசிகள் குடிநீர் தேவைக்காக ஊராட்சி பகுதியில் ஏழு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.மேலும், ஊராட்சி பகுதியில் சிவன் கோவில் அருகே உள்ள 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பகுதிவாசிகள் கடும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.இந்த குடிநீர் தொட்டியிலிருந்து விநியோகம் செய்யப்படும் குடிநீரால் பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, இப்பகுதியில், 2020 - 21ம் ஆண்டு, 'ஜல்ஜீவன் மிஷன்' திட்டத்தின்கீழ் 14.13 லட்சம் ரூபாய் மதிப்பில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்ட ஐந்தாண்டுகளாகியும் இன்று வரை பயன்பாட்டிற்கு வரமால் மாடுகள் கட்டப்பட்டு மாட்டுத்தொழுவமாக மாறியுள்ளது பகுதிவாசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சியில் ஆய்வு செய்து அபாய நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை இடித்து அகற்றவும், புதிய குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கல்லம்பேடு பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.