வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டம்
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறையினர் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில், மூன்றாம் கட்ட பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது.இதில், இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருத்த அரசாணையை உடனே வெளியிட வேண்டும். அலுவலக உதவியாளர் காலி பணியிடம் உடனடியாக நிரப்ப வேண்டும்.கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச்சவரம்பை மீண்டும் 25 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வருவாய் துறையினர் ஏராளமானோர் பங்கேற்றனர். திருத்தணி
திருத்தணி தாசில்தார் அலுவலகம் முன், மூன்றாம் நாளான நேற்றும், 30க்கும் மேற்பட்ட வருவாய் துறை ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால், தாசில்தார் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அன்றாட பணிகள் நடைபெறவில்லை. நலத்திட்ட உதவிகள் பெற வந்த பயனாளிகளும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.