மதுக்கூடமாக மாறிய நெற்களம்
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், ராமாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ரங்காபுரம் கிராமத்தில், 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியினரின் பிரதான தொழில் விவசாயம். இங்கு 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் மூன்று போகம் பயிர் செய்யும் விவசாயிகள் உள்ளனர்.அறுவடை செய்யும் நெற்கதிர், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களில் இருந்து தானியங்களை பிரித்தெடுக்க கதிரடிக்கும் களம் ராமாபுரம் செல்லும் சாலை அருகே அமைக்கப்பட்டுள்ளது.விவசாயிகளின் வசதிக்காக அமைக்கப்பட்ட இந்த நெற்களம், ஓராண்டாக பராமரிக்காததால், புதர் மண்டி உள்ளது. இதை பயன்படுத்தி அப்பகுதியைச் சேர்ந்த மது அருந்துவோர் நெற்களத்தை 'குடி'மையமாக மாற்றியுள்ளனர்.தற்போது, நெற்களத்தில் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கிளாஸ், கவர்கள் ஆங்காங்கே சிதறி காணப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.எனவே, நெற்களத்தை மீட்டு புதர்களை அகற்றி சீரமைக்க, ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.