ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொற்று நோய் பரவும் அபாயம்
திருவாலங்காடு: திருவாலங்காடில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்குள் கழிவுநீர் தேங்கியுள்ளதால், நோயாளிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவாலங்காடில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பழைய பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது. இங்கு, திருவாலங்காடு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, கர்ப்பிணியர் உட்பட தினமும் 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். தற்போது, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கழிவுநீர் தொட்டி நிரம்பியுள்ளது. நிரம்பிய கழிவு நீரை அகற்றாததால், வெளியேறி ஆங்காங்கே தேங்கியுள்ளது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதியில், குழந்தை பெற்ற தாய்மார்கள் தங்கும் அறை உள்ளது. கழிவுநீர் தேக்கத்தால், அவர்கள் தொற்று நோய் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கழிவுநீர் தொட்டியில் இருந்து, கழிவுநீரை வெளியேற்றிட வேண்டும் என, நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.