திருத்தணி போக்குவரத்து பணிமனையில் கூரை சேதம்: பணியாளர்கள் அவதி
திருத்தணி,:திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை இயங்கி வருகிறது. இங்கிருந்து, நகர பேருந்து, புறநகர் பேருந்து மற்றும் விரைவு பேருந்து என, மொத்தம், 75க்கும் மேற்பட்ட பேருந்துகள் தமிழகம், ஆந்திரா போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்றன.இந்த நிலையில், பேருந்துகளை பழுது பார்ப்பதற்கு பணிமனையில் தனியாக அறை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு தொழிற்நுட்ப ஊழியர்கள் வாயிலாக பேருந்துகளை பழுது பார்க்கின்றனர். இந்த பிரிவில், 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவு, பகலாக பணிபுரிந்து வருகின்றனர்.பழுது பார்க்கும் அறை, கூரை தகடுகளால் பொருத்தப்பட்டுள்ளன. பணிமனை நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் தற்போது பாதியிடம் கூரை தகடுகள் காற்றில் அடித்து செல்லப்பட்டு வெறும் வெற்றிடமாக உள்ளது.இதனால் பேருந்துகள் பழுது பார்க்கும் ஊழியர்கள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் பணிபுரிய வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால், ஊழியர்கள் வேலை செய்வதற்கு சிரமப்படுகின்றனர்.எனவே, மாவட்ட போக்குவரத்து உயரதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, சேதமடைந்த கூரையை சீரமைத்து தர வேண்டும் என, ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.