திருத்தணி புதிய பேருந்து நிலையத்தில் தரைத்தளம் அமைக்க ரூ.3.65 கோடி தேவை
திருத்தணி:திருத்தணி புதிய பேருந்து நிலையத்திற்கு கான்கிரீட் தரை அமைப்பதற்கு, 3.65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு, நகராட்சி நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை அருகே, கடந்த 2022ம் ஆண்டு, 4.5 ஏக்கர் பரப்பளவில், 12.74 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணியை, அமைச்சர் நேரு துவக்கி வைத்தார். ஆறு மாதங்களுக்கு முன் பேருந்து நிலையத்தின் முகப்பில் முருகன் கோவில் கோபுரம் வடிவம் அமைக்க, தமிழக அரசிடம் கூடுதலாக, 2.93 கோடி ரூபாய் நகராட்சி நிர்வாகம் கேட்டு பெறப்பட்டது. இரு மாதங்களுக்கு முன் முகப்பு வாயில் கோவில் கோபுரம் மற்றும் சுற்றுசுவர் அமைக்கப்பட்டது. பேருந்து நிலையத்தில் தரைத்தளம், தார்ச்சாலை அமைக்க நகராட்சி நிர்வாகம் தீர்மானித்து, பணிகளை துவக்க இருந்த நிலையில், கடந்த மாதம் நகராட்சி ஆணையர் மற்றும் செயற்பொறியாளர், மாவட்ட கலெக்டர் புதிய பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தனர். அப்போது, 'தார்ச்சாலை அமைக்க வேண்டாம். அதற்கு பதிலாக கான்கிரீட் தரைத்தளம் அமைக்க வேண்டும்' என, உத்தரவிட்டனர். இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு, 3.65 கோடி ரூபாய் நிதி தேவை என, திட்டமதிப்பீடு தயார் செய்து, மீண்டும் தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியது. இதுகுறித்து நகராட்சி அதிகாரி கூறியதாவது: புதிய பேருந்து நிலையத்தில் தரைத்தளம், கான்கிரீட் தளம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறும், அதற்கான அரசாணை வழங்க வேண்டும் எனவும், அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். நிதியுதவி மற்றும் பணிகள் துவங்குவதற்கு அனுமதி வழங்கினால், இரண்டு மாதத்திற்குள் கான்கிரீட் தளம் அமைத்து, புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.