துப்புரவு பணியாளர் பணியிடம் காலி பள்ளி வளாகங்களில் குப்பை குவியல்
பள்ளிப்பட்டு:துாய்மை பணியாளர்கள் இல்லாத அரசு பள்ளிகளில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், நீர்வரத்து கால்வாய் சீரமைப்பு, சாலையோர செடிகள் அகற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள சில அரசு பள்ளிகளில், துப்புரவு பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், இப்பள்ளி வளாகங்களை சுத்தம் செய்ய முடியாத நிலை உள்ளது. இந்த பள்ளி வளாகங்களில் உள்ள மரங்களில் இருந்து உதிரும் சருகு மற்றும் இலைகளை அகற்றுவது, தண்ணீர் பாய்ச்சுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. அதற்கான பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், பள்ளி வளாகத்தில் காய்ந்த இலைகள், சருகுகள் அகற்றப்படாமல் குவிந்து உள்ளன. இதற்கான பணியிடங்கள் நிரப்பப்படும் வரை, 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை, இந்த பணிகளை மேற்கொள்ள, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.