உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  அரசு பள்ளி நுழைவாயில் அருகே தனியார் பள்ளி விளம்பர பேனர் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி

 அரசு பள்ளி நுழைவாயில் அருகே தனியார் பள்ளி விளம்பர பேனர் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி

பொன்னேரி: அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் முகப்பில் தனியார் பள்ளியின் விளம்பர பேனர் வைத்திருப்பது, சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பகுதியில், ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1,500க்கும் மேற்பட்ட மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் நுழைவாயில் அருகே, பல்வேறு அமைப்புகளின் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதும், தனியார் நிறுவனங்களின் விளம்பர பேனர்கள் வைக்கப்படுவதும் வழக்கமாக உள்ளது. தற்போது, தனியார் பள்ளி, வரும் கல்வியாண்டிற்கான சேர்க்கை குறித்த விளம்பர பலகை வைத்துள்ளது. இது, சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து, ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கையில் ஈடுபடுகிறது. இந்நிலையில், தனியார் பள்ளியின் மாணவர் சேர்க்கைக்கான விளம்பரத்தை, அரசு பள்ளி நுழைவாயில் அருகே வைத்துள்ளது. இதை, உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், சுற்றுச்சுவர் முழுதும் சாலை பாதுகாப்பு, கல்வி திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள், வரைபடங்கள் உள்ளிட்டவைகளை எழுதி வைக்கவும், சுவரொட்டிகள், விளம்பர பேனர்கள் வைப்பதை தடுக்கவும், பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை