உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / உயர்நிலை பள்ளியாக தரம் உயர்வு 17 ஆண்டு போராட்டத்திற்கு விடிவு சீனிவாசபுரம் மக்கள் மகிழ்ச்சி

உயர்நிலை பள்ளியாக தரம் உயர்வு 17 ஆண்டு போராட்டத்திற்கு விடிவு சீனிவாசபுரம் மக்கள் மகிழ்ச்சி

திருத்தணி:திருத்தணி அடுத்த சீனிவாசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. திருத்தணி ஒன்றியம் சத்திரஞ்ஜெயபுரம் ஊராட்சியில் சீனிவாசபுரம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு சீனிவாசபுரம், முஸ்லிம் நகர், மேதினாபுரம், நாணமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 290க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியை 2008ம் ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என, கிராம பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள் பலமுறை மாவட்ட நிர்வாகம், எம்.பி., - எம்.எல்.ஏ., ஆகியோரிடம் தொடர்ந்து மனு அளித்து வந்தனர். கடந்த 2012 - 2022ம் ஆண்டு வரை தலைமை ஆசிரியர்களாக பணியாற்றிய சுமதி, கீதாஞ்சலி ஆகியோர், உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என, திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ., விடம் மனுக்கள் அளித்தனர். இதன் பயனாக, கடந்த 13ம் தேதி சீனிவாசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியானது. இந்த அறிவிப்பால் பள்ளி ஆசிரியர்கள், ஊராட்சி மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் அணைகட்டுச்சேரி மற்றும் சீனிவாசபுரம் ஆகிய இரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை