இடிந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி அகற்ற மாணவ - மாணவியர் கோரிக்கை
திருமழிசை:காவல்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டுமென, மாணவ- மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருமழிசை அடுத்த காவல்சேரி ஊராட்சியில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 80க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக, 25 ஆண்டுகளுக்கு முன் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. தற்போது, இந்த குடிநீர் தொட்டியின் துாண்கள் மிகவும் சேதமடைந்து, இடிந்து விழும் அபாய நிலையில் பயன்பாடில்லாமல் உள்ளது. இதே பகுதியில் மற்றொரு இடத்தில் புதிய குடிநீர் தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.இதுகுறித்து, பலமுறை ஒன்றிய நிர்வாகத்திற்கு தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என, பெற்றோர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.