பஸ்சில் தகராறு செய்த மாணவர்களை காவல் நிலையம் அழைத்து அறிவுரை
திருத்தணி, ஆந்திரா மாநிலம் நகரியில் இருந்து திருத்தணி வரை தடம் எண். டீ.15 என்ற தமிழக அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து நேற்று காலை 7:30 மணிக்கு நகரியில் இருந்து திருத்தணி நோக்கி வந்தது.திருத்தணி நகரம் சென்னை பைபாஸ் சாலையில் 8:40 மணிக்கு வந்தபோது, அதில் பயணம் செய்த தரணிவராகபுரம் மற்றும் வேலஞ்சேரி கிராமங்களை சேர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு மேனிலை பள்ளி பயிலும் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மாணவர்களை கட்டுப்படுத்தினார். மற்ற மாணவர்கள் இறங்கி ஓடிய நிலையில் இருதரப்பிலும் ஒருவர் என இருவர் சட்டை கிழிந்த நிலையில் பிடிப்பட்டனர்.இதையடுத்து இரு மாணவர்களையும் திருத்தணி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் இன்ஸ்பெக்டர் மதியரசனிடம் ஒப்படைத்தார். மாணவர்களின் பெற்றோரை காவல் நிலையம் வரவழைக்கப்பட்டு, இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது. ஒழுக்கமாக இருக்க வேண்டும் படிப்பதற்காக தான் உங்களை பெற்றோர் பள்ளிக்கு அனுப்புகின்றனர் என, அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.