உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  கூட்டுறவு வார விழாவிற்கு வந்த கரும்பு விவசாயிகள் சாலை மறியல்

 கூட்டுறவு வார விழாவிற்கு வந்த கரும்பு விவசாயிகள் சாலை மறியல்

திருவள்ளூர்: கூட்டுறவு வார விழாவிற்கு வந்த விவசாயிகள், காய்ந்த கரும்புடன் ஜே.என்.சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டு, அமைச்சரை முற்றுகையிட்டதால் போக்குவரத்து பாதித்தது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, திருவாலங்காட்டில் இயங்கி வருகிறது. நடப்பாண்டிற்கான கரும்பு அரவை, இரண்டு மாதமாக நடைபெற்று வருகிறது. உத்தரவு இதற்காக, சர்க்கரை ஆலை நிர்வாகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விவசாயிகளிடம் இருந்து, கரும்பு வெட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பின் வெட்டப்பட்ட கரும்புகள், அரவைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், திருவள்ளூர் ஒன்றியம் ஈக்காடு, தலக்காஞ்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதியில், 100 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கு, கடந்த 7ம் தேதி கரும்பு வெட்ட, ஆலை நிர்வாகம் உத்தரவு வழங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விவசாயிகள் வெட்டிய கரும்பு களுடன், ஆலை நிர்வாகம் அனுப்பும் வாகனத்திற்காக காத்திருந்தனர். ஆனால், ஆலை நிர்வாகம் கரும்பை எடுத்துச் செல்ல வாகனம் அனுப்பவில்லை. இதனால், வெட்டப்பட்ட கரும்புகள் அனைத்தும், 50 டன்னிற்கு மேல் காய்ந்து விட்டது. இதையடுத்து, திருவள்ளூர் ஜே.என்.சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கூட்டுறவு வார விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, காய்ந்த கரும்புகளுடன் வந்த விவசாயிகள், திடீரென சென்னை - திருத்தணி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். நிகழ்ச்சி முடிந்ததும், மண்டபத்தில் இருந்து வெளியில் வந்த அமைச்சர் நாசரை, விவசாயிகள் மறித்து முறையிட்டனர். அவர்களை அமைச்சர் மற்றும் கலெக்டர் பிரதாப் சமாதானப்படுத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதன் காரணமாக, அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருவாலங்காடு அதேபோல், திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், ஆர்.டி.ஓ., கனிமொழி தலைமையில் நேற்று நடந்தது. இதில், விவசாயிகள் கூறியதாவது: தமிழகத்தில் கரும்பு டன்னுக்கு, 4,000 ரூபாய் வழங்கப்படுவதால், ஆந்திர மாநிலத்தில் பயிரிடப்படும் கரும்புகளை, போலி ஆவணங்கள் மூலம் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சிலர் அனுப்புகின்றனர். இதனால், திருத்தணி வருவாய் கோட்டத்தில் உள்ள கரும்பு விவசாயிகள், தங்கள் கரும்புகளை கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்ப முடியாமல் நஷ்டம் அடைகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை