உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கொசஸ்தலை ஆற்றின் கரைகள் சேதம் வெள்ளத்தின் போது உடையும் அபாயம்

கொசஸ்தலை ஆற்றின் கரைகள் சேதம் வெள்ளத்தின் போது உடையும் அபாயம்

மீஞ்சூர்:கொசஸ்தலை ஆற்றின் கரைகள் சேதமடைந்து இருப்பதால், வெள்ளப்பெருக்கு காலங்களில் கரைகள் உடைந்து, அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மீஞ்சூர் அடுத்த ராமரெட்டிப்பாளையம் கிராமத்தின் அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றின் கரைகள், ஆங்காங்கே சேதமடைந்து உள்ளது. கரைகள் மண் அரித்தும், செடிகள் வளர்ந்தும் பராமரிப்பு இன்றி உள்ளது. இங்குள்ள சீமாவரம் பாலத்தின் கீழ் பகுதியில், கரைகளில் மண் சரிவு ஏற்பட்டு வருவதால், பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆற்றின் அருகே ராமரெட்டிப் பாளையம், காவல் நகர், மேட்டு ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. கரை உடைப்பு ஏற்பட்டால், இப்பகுதிகள் பாதிக்கும் அபாயம் உள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், கொசஸ்தலை ஆற்றின் கரைகளை சீரமைக்க, நீர்வளத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்பு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து குடியிருப்பு மக்கள் கூறியதாவது: கனமழை பெய்யும் போது, பூண்டி நீர்தேக்கத்தில் இருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்படும். அப்போது, கொசஸ்தலை ஆற்றின் இரு கரைகளை தொட்டு, வெள்ளநீர் பாயும். அச்சமயங்களில், பலவீனமாக உள்ள கரைகளில் உடைப்பு ஏற்படுவது வழக்கமாக உள்ளது. பாதிப்புகளை தவிர்க்க, உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை