மேலும் செய்திகள்
நெருக்கடியில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம்
23-Sep-2025
திருவாலங்காடு:திருவாலங்காடு வட்டாரத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் சேதமடைந்து, மோசமான நிலையில் உள்ளது. இதனால், புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழக அரசு, 2 - 5 வயது வரையுள்ள குழந்தைகள் கல்வி பயிலும் வகையில், அங்கன்வாடி மையங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில், திருவாலங்காடு வட்டாரத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 124 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இதில், 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குழந்தை வளர்ச்சி திட்டத்துக்கென, திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியில் அரசு கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், கட்டடம் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால், ஊழியர்கள் பணியாற்ற முடியாத நிலை உள்ளது. அங்கன்வாடிகளின் செயல்பாடுகள், குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் அரசு திட்டங்களை செயல்படுத்துதல் குறித்து, பணியாளர்களுக்கு கூட்டம் நடத்த பயன்படும் இக்கட்டடம், தற்போது சேதமடைந்து படுமோசமான நிலையில் உள்ளது. எனவே, கட்டடத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
23-Sep-2025