தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகள் நெரிசலில் சிக்கி திக்... திக் பயணம்
திருவள்ளூர், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையாக சீரமைப்பு பணிகள் தற்போது நடந்து வருகின்றன.தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் செல்லும் இந்த அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலைகள் வழியாக தான் பெட்ரோல் பங்க்களுக்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். ஆனால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்குகளுக்கு செல்வதற்கு பங்க் எதிரிலேயே நுழைவு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.இந்நிலையில் தற்போது அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் செட்டிபேடு, திருமழிசை, பாப்பன்சத்திரம், தண்டலம் உட்பட பல இடங்களில் வாகன வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் பேரிகார்டு கொண்ட தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்புகளால் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதோடு விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது. எனவே, அதிகாரிகள் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.