வல்லுார் அணைக்கட்டில் சீரமைப்பு பணி தீவிரம் நீர் அளவீட்டு கருவி பொருத்தம்
மீஞ்சூர்:வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வல்லுார் அணைக்கட்டு பகுதியில் சேதம் அடைந்த கான்கிரீட் தளங்களை சீரமைக்கும் பணி நடக்கிறது. மீஞ்சூர் அடுத்த சீமாவரம் பகுதியில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே வல்லுார் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டு, 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மழைக்காலங்களில் அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், மீஞ்சூரை சுற்றியுள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. கடந்தாண்டு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது, அணைக்கட்டின் முகப்பில் உள்ள கான்கிரீட் தளம் சேதமானது. கட்டுமானங்கள் சிதைந்து பாறை கற்கள் சரிந்தன. இது குறித்து நம் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியாகின. அதை தொடர்ந்து, சேதமடைந்த கான்கிரீட் தளங்களை சீரமைக்கும் பணியில் நீர்வளத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். சேதமான கான்கிரீட் கட்டுமானங்களை முழுமையாக அகற்றிவிட்டு, அங்கு புதிதாக தளம் அமைக்கும் பணி நடக்கிறது. மேலும், அணைக்கட்டின் நீர் இருப்பு, வெளியேற்றம் உள்ளிட்ட தினசரி கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான, சோலாரில் இயங்கும் நீர்அளவீட்டு கருவி பொருத்தப்பட்டு உள்ளது. பள்ளிப்பட்டு, சொராக்காய்பேட்டை, வெடியம் பகுதிகளில் கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, பூண்டி நீர்தேக்கம் வேகமாக நிரம்பி வருகிறது. தற்போது அதன் கொள்ளளவான, 3.2 டி.எம்.சி.,யில், 2.8 டி.எம்.சி., தண்ணீர் உள்ளது. அடுத்த சில தினங்களில் தண்ணீர் நிரம்பும்போது, உபரிநீர் படிப்படியாக திறக்கப்பட்டு தாமரைப்பாக்கம், காரனோடை வழியாக, வல்லுார் அணைக்கட்டை வந்தடையும். அதற்குள், வல்லுார் அணைக்கட்டு சீரமைப்பு பணிகளை முடித்து, தயார் நிலையில் வைத்திருக்க திட்டமிட்டு இருப்பதாக நீர்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.