உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இடவசதியில்லாத ஆர்.டி.ஓ., அலுவலகம் சாலையில் எட்டு போடும் அவலம் பக்தர்கள் கடும் அவஸ்தை

இடவசதியில்லாத ஆர்.டி.ஓ., அலுவலகம் சாலையில் எட்டு போடும் அவலம் பக்தர்கள் கடும் அவஸ்தை

திருத்தணி:திருத்தணி - திருவள்ளூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குன்னத்துார் பேருந்து நிறுத்தம் அருகே, திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வாகன ஓட்டிகள், புதிதாக ஓட்டுனர் உரிமம் எடுப்பது, புதுப்பித்தல், வாகனங்கள் பதிவு செய்வது, பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்கின்றனர்.இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள், ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு வரும் போது, அங்கு வாகன ஓட்டிகள் 'எட்டு' போடுவதற்கு போதிய இடவசதியில்லை.இதன் காரணமாக, அலுவலகம் எதிரே உள்ள சத்திய சாட்சி கந்தன் கோவில் முன் உள்ள குறுகிய சாலையில், வாகனத்தை ஓட்டி காண்பிக்க வேண்டியுள்ளது. குறுகிய சாலை என்பதால், வாகன ஓட்டிகள் எட்டு போடுவதற்கு சிரமப்படுகின்றனர். மேலும், ஓட்டுனர் உரிமம் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் வாகன ஓட்டிகள் நலன் கருதி, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், வாகனங்கள் எட்டு போடுவதற்கு போதிய இடவசதி ஏற்படுத்தி தரவேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு பணம் வீண்

திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், கடந்தாண்டு 2.50 கோடியில் புதிதாக கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ள நிலம் தனிநபருக்கு சொந்தம் என்பதால், வாகனங்கள் எட்டு போடுவதற்கும், வாகன ஓட்டிகள் பயிற்சிக்கும் போதிய இடவசதியில்லை. இந்த அலுவலகம் கட்டும் போதே, வாகன பயிற்சிக்கு தேவையான இடம் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இதன் காரணமாக, அரசு பணம் வீணாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி