மெய்யூரில் வீட்டு மனை அளந்து கொடுக்கும் பணி துவக்கம்
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை வட்டம், மெய்யூர் கிராமத்தில், 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியினரின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கூலி வேலைக்கு செல்வது.கடந்த 2000ம் ஆண்டு, ஜனவரி மாதம், பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், 183 பேருக்கு தலா, மூன்று சென்ட் நிலம் வழங்கப்பட்டது. ஆனால், கால் நுாற்றாண்டு கடந்த நிலையில், இதுவரை நிலம் அளவீடு செய்து கொடுக்கவில்லை.இதுகுறித்து, அப்பகுதியினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை. தற்போது புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் பிரதாப்பிடம் அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.இதைத் தொடர்ந்து, கலெக்டர் உத்தரவின்படி, ஊத்துக்கோட்டை வருவாய்த் துறையினர், நேற்று, 10 பேர்களுக்கு நிலத்தை அளந்து கொடுத்தனர். தொடர்ந்து மற்றவர்களுக்கு அளந்து கொடுக்கப்படும் என, வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.