தற்காலிக பஸ் நிலையமும் ஆக்கிரமிப்பாளர்கள் வசம்
செங்குன்றம்:செங்குன்றம், அண்ணா பேருந்து நிலையத்தில், 2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. இதையடுத்து, மேலும், புழல் ஏரிக்கரை எதிரே தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணியும், சமீபத்தில் முடிக்கப்பட்டு பேருந்து கண்காணிப்பாளர் அறை மற்றும் கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன.தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டால் தான், செங்குன்றம் அண்ணா பேருந்து நிலைய மேம்பாட்டு பணிகள் துரிதகதியில் நடத்தி முடிக்க முடியும்.ஆனால் பேருந்துகளை இடமாற்றம் செய்யாமல், அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால், தற்காலிக பேருந்து நிலையத்தையும் தனியார் பேருந்துகள், லாரிகள் ஆக்கிரமித்து வருகின்றன.ஏற்கனவே, செங்குன்றம் பேருந்து நிலையத்தை வியாபாரிகள், ஆட்டோ மற்றும் வேன்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில், புதிதாக கட்டப்பட்ட தற்காலிக பேருந்து நிலையத்தையும் ஆக்கிரமிப்பாளர்கள் விடவில்லை.முன்னதாக, செங்குன்றத்தில் நடந்து வரும் மேம்பாட்டு பணிகள், மந்தகதியில் நடப்பதை அறிந்த திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், கடந்த மாதம் செங்குன்றத்தில், திடீர் ஆய்வு செய்து, அதிகாரிகளை கண்டித்தது குறிப்பிடத்தக்கது.