உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வேளாண் அலுவலக கட்டுமான பணிக்கு துருப்பிடித்த கம்பி பயன்படுத்துவதால் அதிர்ச்சி கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறி

வேளாண் அலுவலக கட்டுமான பணிக்கு துருப்பிடித்த கம்பி பயன்படுத்துவதால் அதிர்ச்சி கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறி

திருவாலங்காடு;திருவாலங்காடில் புதிதாக கட்டப்படும் வேளாண் அலுவலக கட்டடத்திற்கு பயன்படுத்தப்படும் கம்பிகள் துருப்பிடித்து உள்ளதாலும், சிமென்ட் கலவை சரியாக போடாததால், கட்டடத்தின் உறுதி தன்மை கேள்விக் குறியாகி உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். திருவாலங்காடு வட்டார வேளாண் அலுவலகத்திற்கு உட்பட்ட 42 ஊராட்சிகளில், 50,000 ஏக்கர் பரப்பில் நெல், தோட்டக்கலை பயிர்கள் பயிரிடப்படுகிறது. வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் வழங்கப்படும் உரம், விதை உள்ளிட்ட இடுபொருட்களை வாங்க, திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலகம் அருகே செயல்பட்ட ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகத்தை விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். கட்டடம் பழுதடைந்ததால் கடந்தாண்டு இடிக்கப்பட்டு, ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையமாக கட்ட, 2 கோடியே 30 லட்சத்து 90,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் பணி துவங்கியது. தற்போது, அடித்தளம் அமைக்கப்பட்டு, கட்டடத்தின் உறுதிக்காக 'பெல்ட்' அமைக்க கம்பி கட்டப்பட்டுள்ளது. இந்த கம்பி ஏற்கனவே துருப்பிடித்துள்ளது. தற்போது, 20 நாட்களுக்கும் மேலாக வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் உள்ளது. இதனால், கம்பியின் தரம் குறைந்து, கட்டடத்தின் உறுதி தன்மை கேள்விக்குறியாகி உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் புலம்புகின்றனர். மேலும், கட்டடத்திற்கு காலை - மாலை வேளைகளில் தண்ணீர் பாய்ச்சுவதில்லை. இதனால், சிமென்ட் பூச்சுகள் உதிரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், கட்டடத்தின் உறுதிதன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை