பழவேற்காடில் பஸ் நிலையம் இல்லை சாலையோரங்களில் நிற்பதால் சிரமம்
பழவேற்காடு: பழவேற்கோடில் சாலையோரம் பேருந்துகள் நிறுத்தப்படுவதால், மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழவேற்காடு மீனவ பகுதிக்கு பொன்னேரி, செங்குன்றம், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் இருந்து, அரசு போக்குவரத்து மற்றும் மாநகர போக்குவரத்து கழகங்கள் வாயிலாக, 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு, பேருந்து நிலையம் இல்லாதாதல், பழவேற்காடு பஜார் பகுதியில் எப்போதும், இரண்டு முதல் மூன்று பேருந்துகள் பயணியரை ஏற்றிச் செல்வதற்காக காத்திருக்கின்றன. சுற்றுலா பயணியர், மீன் வியாபாரிகள், பொதுமக்கள் என, எப்போதும் பரபரப்பாக இருக்கும் பஜார் பகுதியில் பேருந்தை நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையில் நிறுத்தப்படும் பேருந்துகளால், மற்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பழவேற்காடு பகுதிக்கு பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என, மீனவ மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, பேருந்து நிலையம் அமைக்க தேவையான இடவசதி இருப்பதால், தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவ மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.