கனகம்மாசத்திரம் அருகே அடுத்தடுத்த ஐந்து வீடுகளில் திருடர்கள் கைவரிசை
திருவாலங்காடு,:திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் எல்லப்பநாயுடுபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 60.இவர், குடும்பத்துடன் கடந்த சில மாதங்களாக சென்னையில் வசித்து வருகிறார்.அதேபோல், அதே பகுதியைச் சேர்ந்த சசி, 45, சரவணன், 33, கார்த்திகேயன், 34, வெங்கடேசன், 42, ஆகியோர், குழந்தைகளின் படிப்பு மற்றும் வேலை நிமித்தமாக, இங்குள்ள வீடுகளை பூட்டிவிட்டு, திருவள்ளூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.இந்நிலையில், இந்த ஐந்து பேரின் வீடுகள் தொடர்ந்து பூட்டப்பட்டு இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நேற்று முன்தினம் இரவு ஐந்து வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த பொருட்களை களைத்து பார்த்து உள்ளனர்.இதில், ராஜேந்திரன் என்பவரின் வீட்டு பீரோவில் இருந்த 25,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். மற்றவர்களின் வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் சிலவற்றை திருடிச் சென்றுள்ளனர். அடுத்தடுத்து ஐந்து வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பகுதிவாசிகள், கனகம்மாசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.பின், திருவள்ளூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். ஒரே நாள் இரவில், அடுத்தடுத்து ஐந்து வீடுகளின் பூட்டை உடைத்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.