இடிந்து விழும் அபாய நிலையில் திருமழிசை துணைமின் நிலைய ஆபீஸ் ஊழியர்கள், பயனாளர்கள் திக்... திக்
திருமழிசை:திருமழிசை துணை மின் நிலையம் சேதமடைந்து, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால், மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பயனாளர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சியில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. 1990ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் துணை மின் நிலையத்தில் உதவி பொறியாளர், போர்மேன், லைன் மேன், ஒயர்மேன் என, 20க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த துணைமின் நிலையத்தில் இருந்து திருமழிசை, வெள்ளவேடு, நேமம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அலுவலக கட்டடங்கள் முழுதும் ஆங்காங்கே விரிசல் அடைந்துள்ளது. மேலும், கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால், அலுவலக ஊழியர்கள் மற்றும் மின் கட்டணம், மின் இணைப்பு போன்ற பணிகளுக்கு வரும் பயனாளர்கள் கடும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். மழைக்காலங்களில் மழைநீர் ஒழுகுவதால், அலுவலக பதிவேடுகள் நனைந்து வீணாகி வருகின்றன. எனவே, திருமழிசை துணைமின் நிலையத்தை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய கட்டடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயனாளர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி கூறுகையில், 'திருமழிசை துணை மின் நிலையத்தை, 5 லட்சம் ரூபாயில் சீரமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவக்கப்படும்' என்றார்.