உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாயமான மாணவன் எலும்பு கூடாக மீட்பு ஊத்துக்கோட்டையில் மூவர் கைது

மாயமான மாணவன் எலும்பு கூடாக மீட்பு ஊத்துக்கோட்டையில் மூவர் கைது

ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, ரெட்டித்தெருவை சேர்ந்தவர் தினேஷ், 19. சென்னை, வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கல்லுாரியில் பி.ஏ., தமிழ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரை ஆகஸ்ட் மாதம் முதல் காணவில்லை என, அவரது குடும்பத்தினர் ஆக., 20ல் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., சாந்தி இது குறித்து விசாரித்தார். நாயுடுபேட்டை நாகேஷ், 22, ஊத்துக்கோட்டை கார்த்திக், 22 மற்றும் 17வயது சிறுவன் ஆகிய மூன்று பேரை, தகராறு தொடர்பான வழக்கில் அவர் விசாரித்தார். அப்போது, அவர்களுக்கும் தினேஷுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.இரண்டு மாதங்களுக்கு முன், தினேஷுடன், மேற்கண்ட மூவரும், ஒரு திருநங்கையும் சேர்ந்து, ஐந்து பேரும் கஞ்சா, மது அருந்த ஊத்துக்கோட்டை அடுத்த ஆந்திர மாநில எல்லையான சென்னேரி காவாங்கரைக்கு சென்றுள்ளனர். அங்கு தினேஷ், காமேஷ் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. ஆத்திரமடைந்த காமேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தினேஷின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர், மற்ற நான்கு பேரும் சேர்ந்து, அங்கு பள்ளம் தோண்டி, தினேஷ் உடலை புதைத்துள்ளனர். இவர்களில் காமேஷ் என்பவர், மற்றொரு வழக்கில் சிக்கி, தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய திருநங்கையை போலீசார் தேடி வருகின்றனர்.விசாரணையில் இந்த விபரங்கள் தெரியவந்ததை அடுத்து, தினேஷின் உடலை தோண்டி எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, சத்தியவேடு தாசில்தார் சுப்பிரமணி, ஊத்துக்கோட்டை காவல் ஆய்வாளர் தேவராஜ், அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் தமிழ்செல்வி, வெங்கல் ஆய்வாளர் வெங்கடேசன் முன்னிலையில், திருவள்ளூர் மருத்துவ குழுவினர், நேற்று முன்தினம் மதியம், தினேஷ் உடலை தோண்டி எடுத்தனர். எலும்புகூாடாக மாறி இருந்த உடலை, அங்கேயே பிரேத பரிசோதனை நடத்தி, குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.நாகேஷ், கார்த்திக் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 17 வயது சிறுவனர், பூந்தமல்லி சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கெல்லீஸ் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை