2 இளைஞர்கள் கொன்று புதைப்பு சிறுவன் உட்பட மூன்று பேர் கைது ஊத்துக்கோட்டை அருகே கொடூரம்
ஊத்துக்கோட்டை, ஜூன் 26-கச்சூரில் மாயமான இரண்டு இளைஞர்களை, சிறுவன் உட்பட மூவர் கொலை செய்து புதைத்த கொடூர சம்பவம், ஊத்துக்கோட்டையில் அரங்கேறி உள்ளது.திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த கச்சூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆகாஷ், 18, ஜானகிராமன், 19. இருவரையும், கடந்த 22ம் தேதி முதல் காணவில்லை. இது குறித்து, பென்னலுார்பேட்டை காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் இருவரையும் தேடி வந்தனர்.இந்த நிலையில், ஊத்துக்கோட்டை ரோஜா தெருவைச் சேர்ந்த நலம்பாண்டியன், 23, என்பவர், நேற்று மாலை ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில், மேற்கண்ட வாலிபர்களை கொலை செய்ததாக கூறி சரணடைந்தார். ஊத்துக்கோட்டை போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்தனர்.இதில், இருவரையும் தன் நண்பர்களான மேற்கு காவாங்கரை மணிகண்டன், 23, மற்றும் 17 வயது சிறுவனுடன் சேர்ந்து கொலை செய்து, ஊத்துக்கோட்டை சார் - பதிவு அலுவலக சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் புதைத்தது தெரிய வந்தது. இதையடுத்து, மேற்கண்ட இருவரையும் போலீசார் கைது செய்தனர். இன்று தோண்டி எடுப்பு
இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட ஆகாஷ், ஜானகிராமன் சடலங்கள், இன்று தோண்டி எடுக்கப்பட உள்ளது. மதுபோதையில் கொலை செய்தார்களா அல்லது வேறு ஏதும் காரணமா என, பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.