திருவள்ளூர் - சென்னை மேம்பால பணி ஆறு ஆண்டுகளாக பணிகள் இழுத்தடிப்பு
ஆவடி,:திருவள்ளூர் - சென்னையை இணைக்கும் வகையில், பட்டாபிராமில் ஆறு ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட ரயில்வே மேம்பால பணிகள், ஜவ்வாக இழுக்கின்றன. இதனால், மெட்ரோ ரயில் திட்டங்கள் போன்ற வளர்ச்சி திட்டப்பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் - சென்னை மாவட்டங்களை இணைக்கும் வகையில், ஆவடி அடுத்த பட்டாபிராமில், எல்.சி., - 2 ரயில்வே கடவுப்பாதை உள்ளது. இந்த கடவுப்பாதை, 45 நிமிடங்களுக்கு ஒருமுறை மூடப்பட்டு, சென்னையில் இருந்து பட்டாபிராம் 'சைடிங்' செல்லும் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், நெடுஞ்சாலையின் இருபுறமும், அரை கி.மீ., துாரம் வாகனங்கள் அணிவகுத்து நின்று, போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய - மாநில அரசுகள், 2010 - 11 நிதியாண்டில், 33.48 கோடி ரூபாய் செலவில், நான்கு வழி சாலை மேம்பாலம் அமைக்க திட்டமிட்டன. பின், ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய, தமிழக அரசு முடிவெடுத்தது. அதன்படி, ஐந்தாண்டுகளுக்கு பின் மேம்பாலத்திற்கான திட்ட மதிப்பீடு, 52.11 கோடி ரூபாயாக உயர்ந்தது. பணிகள் 2018ல் துவங்கின. இரண்டு ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, பணிகள் தாமதமாகின. சென்னை - திருத்தணி நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு, வெளிவட்ட சாலை வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டன. இதனால், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, கடந்தாண்டு செப்., 25ல், ஒரு வழிப்பாதை மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. திருவள்ளூர் - சென்னை மார்க்கத்தில், 70 மீட்டர் கிடப்பில் உள்ள ரயில்வே மேம்பால பணிகள், 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்பட்டன. தற்போது, கான்கிரீட் துாண்கள் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. இதையடுத்து, ரயில்வே நிர்வாகம், ராட்சத இரும்பு பாலம் அமைக்கும் பணியை துவங்கும். இந்த பணிகள் முடிந்த பின், தேசிய நெடுஞ்சாலைத்துறை, மீதமுள்ள 'கான்கிரீட்' இணைப்பு பணிகளை மேற்கொள்ளும் என தெரிகிறது. இதற்காக, நெடுஞ்சாலைத்துறை சார்பில், 1.65 கோடி மதிப்பீட்டில் பணிகள் துவங்க, டெண்டர் கோரப்பட்டுள்ளது. பருவ மழை துவங்க உள்ளதால், இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. சென்னை - திருவள்ளூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில், பட்டாபிராமில் ஆறு ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட ரயில்வே மேம்பால பணி அரைகுறையாக உள்ளதால், மெட்ரோ ரயில் திட்டங்கள் போன்ற வளர்ச்சி திட்டப்பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பட்டாபிராம் மேம்பால பணிகள் இதுவரை முடியாததால், பாதசாரிகள் கடுமையாக அவதிப்படுகின்றனர். எனவே, தற்போது நடக்கும் பணியுடன் சேர்த்து, ரவுண்டானா அமைக்கும் பணியையும் துவங்க வேண்டும். அப்போது தான், மெட்ரோ ரயில் பணிகள் துவங்கும் போது சிக்கல் ஏற்படாது. இல்லையெனில், அப்போதும் காலதாமதம் ஏற்படும். - சடகோபன், 65, சமூக ஆர்வலர், பட்டாபிராம். விரயமாகும் மக்கள் பணம் கடந்த 2018ல், 52.11 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மேம்பால பணிகள் துவங்கின. கடந்தாண்டு ஒரு வழிப்பாதை திறக்கும்போது, 26 கோடி ரூபாய் அதிகரித்து, 78.31 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது, 8 கோடியில் ரயில்வே பணியும், 1.65 கோடியில் நெடுஞ்சாலைத்துறை பணியும் நடைபெற உள்ளன. இதனால், மேம்பாலத்தின் மொத்த மதிப்பீடு, 87.96 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தவிர, ரவுண்டானா அமைக்கும் பணி இன்னும் துவங்கப்படாததால், திட்ட மதிப்பீடு 100 கோடியை எட்டும் எனக் கூறப்படுகிறது.