உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொன்னேரியில் வியாபாரிகள் போராட்டம் மழைநீர் வடிகால்வாய் பணி நிறுத்தம்

பொன்னேரியில் வியாபாரிகள் போராட்டம் மழைநீர் வடிகால்வாய் பணி நிறுத்தம்

பொன்னேரி:தீபாவளி பண்டிகை வியாபாரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், மழைநீர் கால்வாய் பணிகளை துவங்கியதை கண்டித்து, வியாபாரிகள் மறியல் போராட்டம் நடத்தினர். பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு, கான்கிரீட் கட்டுமானங்கள் அமைப்பதில் காலதாமதம் செய்யப்படுகிறது. இதனால் வியாபாரிகள், குடியிருப்புவாசிகள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், நேற்று புதிய தேரடி தெருவில், ஏற்கனவே இருந்த மழைநீர் கால்வாயை அகற்றி விட்டு, புதிய கால்வாய் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன. இதற்கு அங்குள்ள வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தீபாவளி பண்டிகை என்பதால், கடைகளுக்கு முகப்பில், கால்வாய் பணிகள் மேற்கொள்ளும்போது, வாடிக்கையாளர்கள் வந்து செல்வது சிரமம் ஏற்படுவதுடன், விற்பனை பாதிக்கும் என, நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தனர். வியாபாரிகளின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து அங்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், வியாபாரிகள் புதிய தேரடி சாலையில், திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து, வியாபாரிகள் கூறியதாவது: தீபாவளி பண்டிகைக்கு ஆறு நாட்களே உள்ளன. தற்போது நடக்கும் கால்வாய் பணிகளால் வாடிக்கையாளர்கள் வரமுடியாத சூழலில் விற்பனை பாதிக்கும். தீபாவளி பண்டிகை முடிந்த பின், பணிகளை மேற்கொண்டால், வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு தருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் பேச்சு நடத்தினர். கால்வாய் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைப்பதாக உறுதியளிக்கப்பட்டது. அதையடுத்து, வியாபாரிகள் போராட்டத்தை விட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை