பருத்திப்பட்டு - கோலடி சாலையில் பள்ளத்தில் இறங்கிய லாரியால் நெரிசல்
ஆவடிபருத்திப்பட்டு - கோலடி சாலையில் பள்ளத்தில் இறங்கிய லாரியால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆவடி அடுத்த பருத்திப்பட்டு - கோலடி சாலை, திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்டது. இங்கு மகாலட்சுமி நகர், எமரால்டு அவென்யு, எம்.ஜி.ஆர்., நகர், கே.எஸ்.ஆர்., நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. சாலையின் ஒருபுறம் ஆவடி மாநகராட்சிக்கும், கோலடி ஏரி உட்பட்ட பகுதிகள் திருவேற்காடு நகராட்சிக்கும் உட்பட்ட பகுதிகள். ஒன்றரை கி.மீ., துாரமுள்ள இந்த சாலையில், மூன்றுக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், கல்லுாரிகள், செங்கல் சூளை மற்றும் சிறு குறு கடைகள் உள்ளன. இந்த சாலையின் இருபுறமும், பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளன. ஆவடியில் இருந்து திருவேற்காடு, அயப்பாக்கம், அம்பத்துார், அத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர், இந்த சாலையை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், நேற்று காலை 7:00 மணியளவில், ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் இருந்து பழைய இரும்பு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று இச்சாலையில் சென்றது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், 35, என்பவர் ஓட்டினார். அப்போது, சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் லாரி இறங்கி சரிந்தது. அந்நேரம் 'பீக் ஹவர்' என்பதால், ஒரு கி.மீ., துாரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவ்வழியாக பள்ளி, கல்லுாரிக்குச் சென்ற மாணவ - மாணவியர் கடும் அவதிப்பட்டனர். பள்ளி வாகனத்தில் வந்த மாணவர்கள், பாதி வழியில் இறங்கி ஒரு கி.மீ., துாரம் பள்ளிக்கு நடந்து சென்றனர். போலீசார் கிரேன் வரவழைத்து, மூன்று மணி நேரம் போராடி லாரியை மீட்டனர்.