பணம் எடுக்க சாட்சி கையெழுத்து தபால் அலுவலக செயலால் தவிப்பு
திருவாலங்காடு:தபால் அலுவலகத்தில் சிறுசேமிப்பு பணம் எடுக்க சாட்சி கையெழுத்து கேட்பதால், வாடிக்கையாளர்கள் தவித்து வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு சுற்றுவட்டார கிராமங்களான சின்னம்மாபேட்டை, வேணுகோபாலபுரம் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.கிளை தபால் அலுவலகத்தில், 40,000க்கும் மேற்பட்டோர், சேமிப்புக் கணக்கு, மாதாந்திர வட்டி பெறும் கணக்கு, நிரந்தர வைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் பணம் செலுத்தி வருகின்றனர்.வாடிக்கையாளர்கள், தங்கள் சேமிப்பு கணக்கிலிருந்து பணம் எடுக்க, சேமிப்பு கணக்கு புத்தகம் மற்றும் பணம் பெறும் படிவத்தை நிரப்பி கொடுத்தால், ஆதாருடன் சாட்சி ஒருவர் கையெழுத்திட வேண்டும் என்று கேட்பதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, சிறு சேமிப்பு முகவர்கள் கூறியதாவது:வைப்புத் தொகை அல்லது சிறுசேமிப்பு திட்டம் முதிர்வடையும்போது சாட்சி கையெழுத்து கேட்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், சேமிப்பு கணக்கில் எடுக்கும் தொகைக்கு, ஆதார் உள்ள சாட்சி ஒருவர் கையெழுத்திட வேண்டும் என்று கூறுவதால், ஏராளமான வாடிக்கையாளர்கள் திரும்பிச் செல்கின்றனர்.இதுகுறித்து தலைமை தபால் அலுவலகத்திலும் புகார் தெரிவித்துள்ளோம். எந்த தபால் அலுவலகத்திலும் இல்லாத நடைமுறை, திருவாலங்காடு கிளை தபால் அலுவலகத்தில் அமல்படுத்தப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து திருவள்ளூர் தபால் துறை அதிகாரி கூறுகையில், 'தபால் அலுவலகத்தில் கைரேகை வைத்து பணம் எடுப்பவர்களுக்கு மட்டுமே சாட்சி கையெழுத்து கேட்கப்பட்டும். புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.