சிப்காட் சாலைகளை ஆக்கிரமிக்கும் லாரிகள் பார்க்கிங் வளாகம் இருந்தும் பயனில்லை
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் 220 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. வளாகம் முழுதும், 22 கிலோ மீட்டர் நீள சாலைகள் உள்ளன. அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு தினசரி நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன.நிர்வாக சிக்கல்கள் காரணமாக, ஒவ்வொரு வாகனங்களாக தொழிற்சாலைக்குள் அனுமதிக்கப்படுகின்றன. எஞ்சிய வாகனங்கள் அந்தந்த தொழிற்சாலை முகப்பில் உள்ள சிப்காட் சாலைகளின் ஓரம் நிறுத்தப்படுகின்றன.இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக, சிப்காட் வளாகத்தில் மூன்று இடங்களில் கட்டண பார்க்கிங் வளாகங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஒவ்வொரு வளாகமும், 100 கனரக வாகனங்கள் நிறுத்தும் வசதி கொண்டது.இருப்பினும், பல கனரக வாகனங்கள், சிப்காட் சாலைகளின் ஓரம் நிறுத்தப்படுகின்றன. அவற்றை கண்காணிக்க வேண்டிய சிப்காட் ரோந்து படையினரும் கண்டுக்கொள்வது இல்லை.சிப்காட் சாலைகளில் கனரக வாகனங்களை நிறுத்தாமல் இருக்க, ரோந்து படையினர் முறையாக கண்காணித்து அறிவுறுத்த, சம்பந்தப்பட்ட சிப்காட் அலுவலர் உத்தரவிட வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.