உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தார்ப்பாய் மூடாமல் செல்லும் லாரிகளால் விபத்து அச்சம்

தார்ப்பாய் மூடாமல் செல்லும் லாரிகளால் விபத்து அச்சம்

திருவாலங்காடு: திருவாலங்காடு பகுதியில் கிராவல் மண், எம்.சாண்ட் ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகள், தார்ப்பாய் மூடாமல் செல்வதால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர். அரக்கோணம், காஞ்சிபுரம், திருவாலங்காடு பகுதிகளில் சவுடு மண் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளில் இருந்து, நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக கிராவல் மண் எடுக்கப்படுகிறது. சில நாட்களாக ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட் மற்றும் கிராவல் மண் ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகள், தார்ப்பாய் மூடாமல் அதிவேகமாக செல்கின்றன. இந்த லாரிகளில் இருந்து பறக்கும் துாசி, பின்னால் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். தார்ப்பாய் மூடாமல் செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் அதிகாரிகள் திருவாலங்காடு பகுதியில் ஆய்வு செய்து விதிமீறும் லாரிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மப்பேடு கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு அடுத்துள்ளது இறையாமங்கலம் ஊாட்சி. இங்குள்ள நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன் சவுடு மணல் அள்ளும் பணி துவங்கியது. இதில் ஏரியில் சவுடு மணல் அள்ளப்பட்ட லாரிகள் மப்பேடு - மேல்நல்லாத்துார் நெடுஞ்சாலை வழியாக வெளிவட்ட சாலை பணிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த சவுடு மணல் லாரிகளால் மப்பேடு - மேல்நல்லாத்துார் நெடுஞ்சாலை மிகவும் சேதமடைந்து கற்கள் பெயர்ந்து மோசமாகி வருகிறது. இதனால் இந்த சாலை வழியே பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மப்பேடு, இறையாமங்கலம், நுங்கம்பாக்கம், கீழச்சேரி உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர், பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த கிராம சாலையை சீரமைக்க வேண்டுமென 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ