‛ஓசி பிஸ்கெட் கேட்டு தகராறு; இருவர் கைது
பொதட்டூர்பேட்டை: பெட்டிக்கடையில் வாங்கிய பொருட்களுக்கு பணம் தரமறுத்து, கடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை போலீசார் கைது செய்தனர். பொதட்டூர்பேட்டை அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டையைச் சேர்ந்தவர் அருண்குமார், 31. இவர், பொதட்டூர்பேட்டை கூட்டுச்சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று, இவரது கடைக்கு வந்த இரண்டு பேர், பிஸ்கெட் உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்கிக் கொண்டு பணம் தரமறுத்தனர். பணம் தரும்படி கேட்ட அருண்குமாரை, மர்ம நபர்கள் கடுமையாக தாக்கினர். இதுதொடர்பாக, பொதட்டூர்பேட்டை போலீசார், கர்லம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா, 22, கொடிவலசாவைச் சேர்ந்த செல்வவிக்னேஷ், 19, ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.