நின்றிருந்த லாரி மீது மோதிய கார் இருவர் பலி; ஒருவர் படுகாயம்
திருவாலங்காடு, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதி நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணித்த இருவர் பலியாகினர்; படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், பிலாயைச் சேர்ந்தவர், உபைன் பாஷா, 70. இவர் நேற்று அதிகாலை சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற, 'மாருதி ஸ்விட்' காரில் புறப்பட்டார். உடன், உறவினர்களான ஷேக் ஷாஜகான், 50, மற்றும் அபி உமர் சாய், 45, ஆகிய இருவர் பயணம் செய்தனர். அபி உமர் சாய் காரை ஓட்டினார். சென்னை ----- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருத்தணி அடுத்த, ஆற்காடு குப்பம் சிவன் கோவில் அருகே சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்னால் மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே, ஷேக் ஷாஜகான் உயிரிழந்தார். அவ்வழியாக சென்றவர்கள், உபைன் பாஷா மற்றும் அபி உமர் சாயை மீட்டு, '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவை வாகனம் மூலம், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உபைன் பாஷாவை பரிசோதித்த மருத்துவர், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். படுகாயமடைந்த அபி உமர் சாய்க்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவம் குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.