பொன்னேரி நகராட்சியுடன் இரண்டு ஊராட்சிகள்...இணைப்பு!:30 கிராமங்களில் உள்கட்டமைப்பு மேம்படுத்த திட்டம்
பொன்னேரி:பொன்னேரி நகராட்சியுடன், அருகில் உள்ள தடப்பெரும்பாக்கம் மற்றும் கொடூர் ஊராட்சிகளில் உள்ள, 30 கிராமங்களை இணைத்து விரிவுபடுத்தி, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, 1952 - 63ம் ஆண்டு வரை இரண்டாம் நிலை பேரூராட்சி, 1963 - 82 வரை முதல் நிலை பேரூராட்சி என செயல்பட்டு, 1982ல் தேர்வு நிலை பேரூராட்சியாக மாறியது.இந்நிலையில், 39 ஆண்டுகளுக்கு பின், 2021ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 16ம் தேதி நகராட்சியாக தரம் உயர்ந்தது. வரி வருவாய், மக்கள் தொகை அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இது, 8.04 சதுர கி.மீ., பரப்பில், 7,605 குடியிருப்புகளை கொண்டு உள்ளது. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 31,025 மக்கள் வசிக்கின்றனர்.கடந்த 2021ல் நகராட்சியாக தரம் உயர்த்தும்போது அருகில் உள்ள மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தடப்பெரும்பாக்கம், கொடூர் ஆகிய ஊராட்சிகளை இத்துடன் இணைக்க திட்டமிடப்பட்டது.அது தொடர்பாக நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்றவர்கள், 'இரண்டு ஊராட்சிகளிலும், 1,000க்கும் மேற்பட்ட நுாறு நாள் பணியாளர்கள் உள்ளனர். நகராட்சியாக தரம் உயர்வதால், அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும். சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தி, கிராம மக்களின் கருத்து கேட்டு முடிவு எடுக்க வேண்டும்' என, தெரிவித்தனர். இதனால், அப்போது, பொன்னேரி நகராட்சியுடன், தடப்பெரும்பாக்கம் மற்றும் கொடூர் ஊராட்சிகளை இணைக்கப்படவில்லை. அதையடுத்து, பொன்னேரி நகராட்சி வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, 18ல் இருந்து 27 ஆக உயர்ந்தது. கடந்த, 2022ம் ஆண்டு, பிப்ரவரியில் நகராட்சி தேர்தல் நடத்தப்பட்டு, மார்ச் மாதம் முதல் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.இரண்டு ஆண்டுகள் முடிந்து, மூன்றாவது ஆண்டு துவங்க உள்ள நிலையில், தற்போது, தடப்பெரும்பாக்கம் மற்றும் கொடூர் ஊராட்சிகளில் உள்ள, 30 கிராமங்களை நகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.இது தொடர்பாக, இரண்டு ஊராட்சிகளும், நகராட்சியுடன் இணைய கிராமசபை கூட்டங்கள் நடத்தி ஒப்புதல் தந்து உள்ளன. இதன் வாயிலாக, நகராட்சியின் எல்லை, 8.04ல் இருந்து, 15.31 சதுர கி.மீ., ஆக விரிவடைகிறது.தற்போது, மேற்கண்ட இரண்டு ஊராட்சிகளின் பதவிக்காலம் முடியும் நிலையில், நகராட்சியுடன் இணைத்து உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவற்கு திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.இதன் வாயிலாக, சென்னை புறநகர் பகுதிகளில் ஒன்றாக உள்ள பொன்னேரி நகரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேமம்படும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:தற்போது, தடப்பெரும்பாக்கம், கொடூர் ஆகிய இரண்டு ஊராட்சிகளில் நாளுக்கு நாள் குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. சென்னை புறநகரில் வேகமாக வளர்ச்சி அடையும் பகுதியாக இவை உள்ளன. நகராட்சியுடன் இவை இணைவதால் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படும்.தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில், பிரதான பிரச்னை குப்பை கழிவுகள் தெருக்களில் குவிந்து கிடப்பதுதான். இவற்றை அன்றாடம் அகற்ற முடிவதில்லை. இவற்றை கொட்டி கையாள்வதற்கு தேவையான இடவசதி இல்லை. தற்போது நகராட்சியுடன் இணையும் நிலையில் இதற்கும் விமோசனம் கிடைக்கும். குடியிருப்புகள் வாயிலாக வரி வருவாய் அதிகரிக்கும். மேலும், மழைநீர் கால்வாய், பாதாள சாக்கடை திட்டம், தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகள் மேம்படும். இந்த ஊராட்சிகளில் உள்ள நுாறுநாள் பணியாளர்களின் வேலைவாய்ப்பு மட்டும் பறிபோகும். அதற்கு அரசு மாற்று திட்டங்களை கொண்டு வந்து அவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:நகராட்சியுடன், தடப்பெரும்பாக்கம், கொடூர் ஆகிய ஊராட்சிகளில் உட்பட்ட கிராமங்களில் உள்ள தெருக்கள், குழாய் இணைப்புகள், குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றை அவ்வப்போது மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வருகிறோம். நகராட்சியுடன் இணைவதால் பல்வேறு திட்டப் பணிகளின் வாயிலாக கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
இணையும் ஊராட்சிகளின் விவரம்
ஊராட்சி மக்கள் தொகை 2011ன் படி குடியிருப்புகள் வார்டுகள் கிராமங்கள்தடப்பெரும்பாக்கம் 8,435 3,250 12 22கொடூர் 2,183, 801 6 8