சுகாதாரமற்ற அங்கன்வாடி மையம்
பொன்னேரி:பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட, 16வார்டு பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இங்கு, 20க்கும் அதிகமான குழந்தைகள் உள்ளனர்.கர்ப்பிணியருக்கு மாதந்திர பரிசோதனை மற்றும் கைக்குழந்தைகளுக்கு தடுப்பு ஊசிபோடும் வளாகமாகவும் இது உள்ளது. குழந்தைகள், பெற்றோர், கர்ப்பிணியர் வந்து செல்லும் இந்த அங்கன்வாடி மைய வளாகம் உரிய பராமரிப்பு இன்றி கிடக்கிறது.கட்டடத்தை சுற்றிலும் குப்பை குவிந்தும், புதர் மண்டியும் உள்ளது. அங்கன்வாடி மையத்திற்கு செல்லும் பாதை சகதியாக உள்ளதுடன், அப்பகுதியை தனிநபர் சிலர் திறந்தவெளி கழிவறையாக பயன்படுத்துவதால், துர்நாற்றம் வீசுகிறது.இதனால், மையத்தில் உள்ள குழந்தைகளுக்கும், தடுப்பூசி போடவரும் கைக்குழந்தைகளுக்கும் நோய் தொற்றுகள் பரவும் சூழல் உள்ளது. குழந்தைகளின் சுகாதாரம் கேள்விக்குறியாகி வரும் நிலையில், அங்கன்வாடி மைய வளாகத்தை துாய்மைபடுத்திடவும், சுகாதாரமாக வைத்திருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.