உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / துார் வாரிய கால்வாயில் அகற்றப்படாத கழிவு மழையால் மீண்டும் துார்ந்து போகும் அபாயம்

துார் வாரிய கால்வாயில் அகற்றப்படாத கழிவு மழையால் மீண்டும் துார்ந்து போகும் அபாயம்

திருவள்ளூர்,அய்யனார் அவென்யூ பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய் துார் வாரிய கழிவு, சாலையோரம் குவிக்கப்பட்டுள்ளது. அதை அகற்றாததால், மழை பெய்தால் மீண்டும் கால்வாய் துார்ந்து போகும் அபாயம் உள்ளது. திருவள்ளூர் ரயில் நிலையம், பெரியகுப்பம், அய்யனார் அவென்யூ, எல்.ஐ.சி., பகுதிகளில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், நான்கு திருமண மண்டபங்கள், உள்ளன. இப்பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், மழைநீர் ஆகியவை செல்ல, பொதுப்பணி - நீர்வள துறை கால்வாய் உள்ளது. இந்த கால்வாய், பெரியகுப்பம் ரயில் நிலையம் அருகில் துவங்கி, எம்.எல்.ஏ., அலுவலகம் வழியாக, அய்யனார் அவென்யூ, எல்.ஐ.சி., வரை வருகிறது. பின், இங்கிருந்து ஜே.என்., சாலையில் கட்டப்பட்டுள்ள பாலம் வழியாக, சிவா விஷ்ணு நகர், ஜெயின் காலனி, வி.எம்., நகர் வழியாக, காக்களூர் ஏரியை சென்றடைகிறது. இந்த கால்வாயை பொதுப்பணி துறை துார் வாராததால், மழை காலத்தில் தண்ணீர் வெளியேறுவதில் தடை ஏற்படும் நிலை ஏற்பட்டது. அய்யனார் அவென்யூ பகுதியில், நாணல் புற்கள் வளர்ந்துள்ளன. இந்த கால்வாயை துார் வார வேண்டும் என, பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, சில நாட்களுக்கு முன் துார் வாரப்பட்டது. ஆனால், துார் வாரப்பட்ட கழிவு, சாலையோரம் கால்வாயை ஒட்டி குவிக்கப்பட்டு உள்ளது. இதனால், சாலையில் செல்லும் மக்கள் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், மழை பெய்தால் அகற்றிய கழிவு அனைத்தும், மீண்டும் கால்வாயில் கலக்கும் அபாயம் உள்ளது. எனவே, துார்வாரி அகற்றிய கழிவை, நகராட்சி நிர்வாகம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை