உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / எண்ணுார் வெளிவட்ட சாலையில் மூலக்கரையில் தரைப்பால பணி

எண்ணுார் வெளிவட்ட சாலையில் மூலக்கரையில் தரைப்பால பணி

திருவள்ளூர்:மாமல்லபுரம்- எண்ணுார் 200 அடி வெளிவட்ட சாலையில், கிராமவாசிகள் நலன் கருதி மூலக்கரையில் தரைப்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. சென்னை மாநகர எல்லைக்குள் கனரக வாகனங்கள் நுழைவதை தவிர்க்க, மாமல்லபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து எண்ணுார் துறைமுகம் வரை 200 அடி சாலை, 133 கி.மீ. துாரத்திற்கு பணி நடக்கிறது. எண்ணுார், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதுார், சிங்கபெருமாள் கோயில் வழியாக மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு வரை சாலை அமைக்கும் பணி நடக்கிறது.திருவள்ளூர்-செங்குன்றம் சாலையில், மூலக்கரையில் இருந்து வெங்கல் வரையிலான சாலையை எறையூர், சித்தம்பாக்கம், மேலானார், மொண்ணவேடு, ராஜபாளையம், மெய்யூர், விளாப்பாக்கம், அரும்பாக்கம், மாளந்தார், தேவந்தவாக்கம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் 200 அடி சாலைக்காக மூலக்கரையில் இருந்து வெங்கல் வரையிலான சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த கிராமவாசிகள் கடந்த, ஜூலையில் திருவள்ளூர் - செங்குன்றம் நெடுஞ்சாலை மூலக்கரை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.வருவாய் துறையினர் அவர்களை சமாதானப்படுத்தினர். அவர்களிடம் கிராமவாசிகள், '200 அடி சாலை அமைந்தால் எங்கள் கிராமத்திற்கு பல கி.மீட்டர் சுற்றி செல்ல வேண்டும். எனவே, மூலக்கரையில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்' என வலியுறுத்தினர்.இதையடுத்து மூலக்கரையில் தரைப்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணியை நேற்று கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதிகாரிகளிடம் கலெக்டர் கூறியதாவது:மேலானுார் கிராமம் மூலக்கரை சந்திப்பில் உள்ள தரை வழிபாலத்தின் இருபுறமும் ஏரி நீர் மற்றும் மழைநீர் உள்ளே புகாதவாறு கான்கிரீட் தடுப்பு ஏற்படுத்த வேண்டும்.மழை காலங்களில் சுரங்கப்பாதையில் தேங்கும் நீரை வெளியேற்ற வடிகால் அமைக்க வேண்டும். மூலக்கரை சந்திப்பிலிருந்து சுரங்கப்பாலம் மற்றும் கிராமங்களுக்கு செல்ல நாசரேத்திலிருந்தும், திருவள்ளூருக்கு செல்ல மேலானுாரில் இருந்தும் 'சர்வீஸ்' சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறுகலெக்டர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி