முகூர்த்த நேரத்தில் காதலன் ஓட்டம் டி.எஸ்.பி.,யிடம் பாதிக்கப்பட்ட பெண் மனு
திருத்தணி: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழனிப்பேட்டை சேர்ந்தவர் ஸ்ரீதர், 29; இவர், தனியார் வங்கி ஒன்றில் வேலை செய்த போது அதே வங்கியில் பணிபுரிந்த கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த அனுஷா, 29, என்பவரை காதலித்து வந்தார். நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இரு வீட்டார் சம்மத்ததுடன் கடந்த மாதம்,15ம் தேதி, காலை 6 -- 7:30 மணிக்குள் திருமண முகூர்த்தம் நடக்கவிருந்தது.திருமண வரவேற்பின் போது ஸ்ரீதர், அனுஷாவும் ஒன்றாக நின்று நண்பர்கள், உறவினர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதிகாலையில் ஸ்ரீதர் தாலி கட்டாமல் தப்பியோடினார். இதனால் அனுஷாவின் திருமணம் நின்றது.இதையடுத்து பாதிக்கப்பட்ட அனுஷா, திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி, திருத்தணி போலீசார் கடந்த, வாரம், ஸ்ரீதரை வரவழைத்தனர். அப்போது, ஸ்ரீதர், அனுஷாவை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து சென்றனர். அதற்கு பின் ஸ்ரீதர் மீண்டும் மாயமனார்.இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் அனுஷா, நேற்று, திருத்தணி டிஎஸ்பி.,கந்தனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.மனுவில், 'ஸ்ரீதர் மற்றும் அவரது பெற்றோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீதருக்கும், எனக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும். போலீசார் தன்னை மருத்துவ பரிசோதனை செய்யுமாறு நிர்பந்திகின்றனர். ஸ்ரீதரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தார்.மனுவை பெற்று கொண்ட டி.எஸ்.பி., கந்தன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி கூறினார்.